Saturday, July 12, 2008

உள் நாக்கு…..



எழுதிவிட வேண்டும்
இந்த காய்ச்சலோடு….
சூட்டோடு சூடாய்……

>----------<

அனுசு அக்கா கடைக்கு எதிர் வீடுதான்
ஈயடிச்சாமூட்டு கிழவி வீடு
கூன் விழுந்த முதுகும்
நல்ல பாம்பு தோலைப் போல - சுருங்கிய தோலும்
தொங்கட்டான் காதும்
வட்டப் பொட்டும்
புகையிலைக் கறை படிந்து தேய்ந்து போன பற்களும்
கவர்மென்ட்டு புடவையும்
தெய்வீக சிரிப்புமாய்……


இது போன்ற காய்ச்சல் வேளையில்
என்னை கிழக்கு நோக்கி அமர வைத்து
சிறிதே செந்தூரம் எடுத்து
உச்சந்தலை நடு முடி தேடி
நாற் புறமும் நன்றாக சுழற்றி
“படக்” சத்தம் வரும் வர இழுத்துப் போவாள்..

என் அம்மா தரும் வெத்திலை பாக்கு காசை மறுத்து…
அந்த காய்ச்சல் உள் நாக்கு எல்லாவற்றையும் தன்னுடன்………..

>----------<

இவ்வளவு வேதனையிலும்
ஆளில்லா அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
மொழி தெரியா உலகத்தில்…
காய்ச்சல் களைப்பில்
காலையில் கண்ணாடியில் தெரிந்த உள் நாக்கு வளர்ச்சிக்குப் பிறகு
தேடிக் கொண்டிருக்கிறேன்
இந்த மானுட வெளியில்...

உள் நாக்கு எடுத்துவிட
கிழக்கு நோக்கி அமர்ந்து
அந்த கிழவியையும் – அவள் கையில்
இராமர் சிவப்பாய் அந்த செந்தூரத்தையும்………….

No comments:

பார்த்ததில் பிடித்தது....