Thursday, April 17, 2008

பொம்மரிலு என்ற சந்தோஷ் சுப்ரமணியம்....


தனிமை என்னை கூறு போடும் ஒரு சாராசரி இரவில், இத் தமிழ் புத்தாண்டு இரவயும் தனிமைக்கு காவு கொடுக்க மறுத்து சென்ற ஒரு தெலுங்கு தமிழ் படம்…

பொம்மரிலு என்ற சந்தோஷ் சுப்ரமணியம் ............

எதிர்பார்ப்பின்றி சினிமா செல்வோம் என்ற என் மானசீக குரு அமரர் திரு.ரங்கராஜன் என்ற சுஜாதாவின் கூற்றின் படி திறந்த மனதுடன் நான்…

ஒரு சாதாரண ஆரம்பம்.அசாதாரணமான காட்சி அமைப்புகள்.காதலனும் காதலியும் சந்திக்கும் முதல் காட்சியே இந்த படத்தின் அடிநாதமாக இருக்கும் இளமைத் துள்ளலுக்கு அடையாளம்…படம் முடியும் வரை சந்தோஷமாய்…

கதை: அந்தபுரத்து கூன்டுக் கிளியாய் அந்த ராஜாவின் மகனும், அவன் ஆசைகளும்………
பணக்கார பையன்.ஏழைப் பொண்ணு..இருவருக்கும் காதல்.. மகனின் சம்மதத்தை (எதற்க்கும் )கேட்காமல் நிச்சயம் செய்யும் அப்பா..இதற்க்கு பிறகு மகனுக்கு வரும் காதல், வேறொரு பெண்ணுடன்…

ஏழு நாட்கள் காதலியை காதலன் வீட்டில் இருக்க அப்பா சம்மதிக்க, அவளும் ஏழு நாட்கள் அவனது வீட்டில் தங்கியபோது தான் தெரிகிறது.அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொறுத்தம் என்று…

கதையிம் முதுகெலும்பாய் கதையின் நாயகி ஜெனிலியா டிசோசா.சுட்டித்தனமான முகம், குறு குறுப்பான கண்கள்..
குதித்தெழுந்தோடும் நடை,உடை,பாவனை..கதை முழுவதும் உன்னை சுற்றி உன்னை சுற்றி மட்டுமே…

ஆனால் கஜினியின் அசினும்,ச.சு ஜெனிலியாவும் ஏதோ ஒரு புள்ளியில் சங்கமித்துக்கொண்டே…

வழக்கமான பிரகாஷ் ராஜ், சூப்பர் செல்லம்..
வழக்கமான ஜெயம் ரவி..அரங்கில் ஒரே ஜொள்ளு மழை..

இசை.. வழக்கமான தேவி ஸ்ரி பிரசாத்..உனக்கும் எனக்கும் தாக்கம் ஆங்காங்கே….மாத்துங்க தல…போரடிக்குது…

அட சண்டையே இல்ல படத்துல..

அழகான சாரல் மழையாய் சந்தானம் மற்றும் பலர்..வடிவேலுக்கு ஒரு நல்ல போட்டி..
உஷார் கைப்புள்ள..எட்டி பாருங்க சிம்புத் தேவனும்
இதையே தான் சொல்றாரு…

இந்த கோடை விடுமுறைக்கு ஒரு நல்ல திரைப்படம், எல்லா வயதினருக்கும்..

இயக்குனர் பற்றி…கை எழுத்து நல்ல இருக்கு கார்பன் காப்பியாக இருந்தாலும்..
சுயமாக ஏதாவது முயற்சி பண்ணுங்க ராஜா சார்…

படம் முழுவதும் மயிலிறகால் மனம் வருடும் காட்சிகள் ஆங்காங்கே….
உணற்ச்சிப் பூக்களாய், அழகான புன்னகையாய், திரைப் படம் முடிந்து வரும் எல்லோர் முகத்தில் தெரிவது போல….

Tuesday, April 8, 2008

ஆசை..................



தொட்டு பார்க்கத் துடிக்கிறது
தார்ச் சாலையில்
உச்சி வெய்யிலில்
நடந்து செல்லும் யானையின் பாதத்தை
காதலுடன்…

மனுஷம்
12-02-02

சபதம்…

துறுதுறுக்கும் கண்கள்
இழுத்து தைத்தது போன்ற தோல்- தொட தூண்டும்
சிரிக்கும் போதும் மட்டுமல்ல
எப்போதும் ...............

அழகிய ஓசை பள்ளத்தாக்காய்
அந்த கன்னக்குழி
தாவத்துடிக்கும் மனதுடன் நீ…

ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தான் போகிறேன்
குழந்தையை தாங்கி நிற்கும் பெண்ணைத் தவிர்த்து
அந்த குழந்தையய் மட்டும் பார்க்க வேண்டும்
என்ற சபதத்தில் இருந்து……

காமம்..........


பிச்சைக்காரியின்
கை ஏந்தும் கைகளைத் தவிர
மற்றவை எல்லாம் தெளிவாய் தெரிகிறது - கவர்ச்சியாய்
மனிதம் மறைந்து நானும்…

மனுஷம்
30-03-02

NRI புள்ள…


வந்துட்டான்….
கொள்ளிபோட அமெரிக்காவில் இருந்து…
கடைசியாய் அப்பாவை பாக்க
பத்து நிமிடம் கழித்து வந்திருந்தால் கூட
பிணம் கிடைத்திருக்காது…

தாய்க்கு தல புள்ள- தகப்பனுக்கு
கடைசி புள்ள- அதுவும் ஒரே பிள்ளை….
வருவானா..? மாட்டானா…? துடித்து போனது இதயம்
பராவயில்லை..தனியாத்தான் வந்திருக்கான்…

ஈர ஆடை உடுத்தி
கண் கலங்கி
மண் கலயம் சுமந்து
தந்தையை சுற்றி வந்து - கடைசியாய்
மேற்கு நோக்கி நின்று
கலயம் உடைத்து
கொள்ளி வைத்து
முழுவதும் எரித்து
சிறிதே சிறிதாய் - மீதமிருந்த
எலும்புச் சாம்பல் பொருக்கி
கலசத்தில் இட்டு
வீடு திரும்பி
குளித்து, கால் கழுகி அமர்ந்தபோது தான்
சாந்தி அடைந்தது - ஆத்மா(கள்)
சுடுகாட்டுக்கு வந்த நாலு பேருக்கும்
சாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்…..

சற்று முன் சவமாய் - இப்போது
சாம்பலாய் அந்த அப்பா…

மனுஷம்
24-02-02

Sunday, April 6, 2008

குடுகுடுப்பைக்காரன் என்ற பிள்ளை பிடிப்பவன் ......................................கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---6


பிள்ளை பிடிப்பவன்.....

யாருக்கு தெரியும் - பிள்ளை
பிடிப்பவன் எப்படி இருப்பன் என்று..

சின்னஞ்சிறு வயதில்
எனக்கு ராச் சோறு ஊட்டியதில்
அந்த குடுகுடுப்பைக்காரணுக்கும்
பெரும் பங்கு உண்டு-பிள்ளை பிடிப்பவன் என்ற போர்வையில்
கருப்பு நிறத்தில் சிவப்பு கரையுடன்….
------<>-------
முறுக்கு மீசையும்
பிள்ளையார் தொப்பையும்
கிழட்டு மாடும்-அதன் மேல்
பழயதாய்
அழியாத மெருகுடன்
கண்ணாடி ஆடையுமாய்-செத்துப் போன
மாட்டின் தோலில் செய்த செருப்பும்
குடு குடு பை யுடன் - பெயற்க்காரணமாய்…
------<>-------
இராத்திரி வேளையில்…
அந்த வயதில்
அவன் வருகைச் சத்தம் கேட்கும் போது - என்னை
கடத்தி சென்று
இரண்டு கண்ணில் கரப்பு கட்டி- குருடனாக்கி
மூலதனமில்லா வியாபாரத்திற்க்கு
என்னை அழைத்து செல்வது போல……

இது தான் பிள்ளை பிடிப்பவன் என்ற
குடுகுடுப்பைக்காரன் பற்றி
என் மனதில் இன்றும்….
------<>-------
சிகப்பு தோலும்
வட்ட முகமும்
முத்து பல் வரிசையும்
மதிப்பு மிக்க ஆடைகலும்
நுனி நாக்கு ஆங்கிலமும்
ஐந்து இலக்க சம்பளமும்
நறுமண கவசமும் - அணிகலன்கலாய்……………
------<>-------

முற்போக்கு இலக்கியமும்
நவீன திரைப் படங்களும் – இதன்
தொழில் நுட்பங்களும்,
ஒளிப்பதிவும்
ஓவியமும்
பின் நவீனத்துவமும்
நாடக பரிச்சயமும்
எழுத்தனுபவமும்
பெண்மை குறித்த பார்வையும்
இவை எல்லாம் கலந்த பேச்சும் - ஆயுதமாய்……..
------<>-------

கற்றவற்றையும்
பெற்றவற்றையும் கலந்து
இப்படி எழுதும் கவிதைகளும்
என் முப்பத்தி இரண்டு வயது
இளமையும் - என் வாகனமாய்.....
------<>-------

ஒரு மாயாவியைப் போல
தோல் செருப்பு உதவியுடன் ஒலி எழுப்பி
எதிர் கொள்வோர் - மனம் அதிர
நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து…..

------<>-------
வயதிற்க்கு வந்த மகளின் அப்பாவிற்க்கும்
சமீபத்தில் திருமணமான என் தோழியின் கணவருக்கும்
அழகான தோழியர் உள்ள என் தோழிகளுக்கும்
இரண்டு குழந்தைகளுக்கு தாயான - என்
அண்ணியின் கணவருக்கும்

சில அழைப்புகளை மறுக்க முடியாமல் விருந்தாளியாகி
சில நாட்கள் குலவியதற்க்கு பின்
என்னுள்ளும்

இப்போதெல்லாம்
முறுக்கு மீசையும்
பிள்ளையார் தொப்பையும்
கிழட்டு மாடும்
குடு குடு பை - யுடன்
கண்களை குருடாக்க கை நிறைய கரப்புமாய்…..
நானும் ஒரு பிள்ளை பிடிப்பவனாய்
எனக்கே தெரியாமல்….
------<>-------
மனுஷம்
21-01-02
நாகர்கோவில்

Saturday, April 5, 2008

பகுத்தறிவோம்….

கறுப்பு சட்டை போட்டு-நடிப்புக்கு கூட
கோவில் படியேறாத நடிகன்
கோவணம் கட்டும் போது
பட பிடிப்பு வெளிச்சத்தில் - பட்டு தெறித்தது
அறைஞான் கயிற்றில் கட்டப் பட்டிருந்த
அரச மரத்தடி சாமியார் மந்தரித்து கொடுத்த
வெள்ளித் தாயத்து…………..
அவனது தலைவரின்


கழுத்து மஞ்சள் துண்டைப் போல….

ஆசயன்
10-08-07

உன்னுடன் பேசாமல் இருந்த போது….


எங்கே நிறுத்துவதென தெரியாமல்
நிறுத்தி உண்ட உணவு

உணர்ச்சிகலின் வடிகாலாய் ஒரு
மோட்டார் வாக(கா)ன பயணம்

கள்ளச் சந்தையில் சினிமா முடித்து வீடு சேர்ந்தேன்
போலிசுக்கு பயந்து..

உறங்காமல்
உறக்கத்திற்க்கு மருந்தாய்- இக்கவிதைகள்

இப்படி எதுவுமே மாறவில்லை- என் வாழ்க்கையில்

நாம் இருவரும் பேச வேன்டாம் எனத்
தீர்மானித்ததில் இருந்து - இது
எத்தனையாவது நாள்- தெரியவில்லை….

சலனமற்று கை பேசியும்
சடலமாய் நானும்…

மனுஷம்
29-07-07
1:15 காலை

காலம்…


என்றோ இறந்து போன - சுவற்க் கடிகாரத்தையும்
உயிற்ப்பித்து போனது- காலம்
அந்த ஒரு விநாடியில்
தினம் இரு முறையாவது…

மனுஷம்
9-8-06

காய்ச்சலின் காரணம்………..



எங்கிருந்து தொடங்கியது - இது

வெரும் வயிற்றில் கரும்புசாரு - இரு குவளை
ஐஸ் சேர்த்துத்தான்-சிரிதே

அத்தை வீட்டில் மீன்குழம்பு-நேற்று செய்தது

ஜுரம் வந்த நன்பனின் அருகாமை…

தூக்கமில்லா இரவுகலில் மூன்று குவலை மது

உச்சி வெய்யில் அலைந்து அலுவலக ஏ/சி இருக்கை

இரவு முழுவதும் உலக கோப்பை கால்பந்து
சின்னத் திரையில் ...............
(என் பேச்சை யாரு கேக்கறா..அடுப்படி அம்மா)

அலுவலக தோழனுடன் குளிர்ந்த பீருடன்
ரோட்டோர பிரியாணி

கதவு திறந்து வைத்து இரயில் பயணம் சன்னலோரத்தில்

கை வலிக்கிறது இதற்க்கு மேல் எழுத முடியாமல்
சோர்வாய்
இருமி
இருமி
இந்த பாழாய்ப் போன _ காரணம் தெரியா
காய்ச்சலுடன் நான்…..,

ஆசயன்
20-07-06

முரன்…


நேற்று நடந்த இரயில் விபத்தில்
அகால மரணமடைந்த
அலுவலகத் தோழனின்-(மரண)
மௌன அஞ்சலியில் ஒலித்தது……
அவனுக்கு மிகவும் பிடித்த ரிங் டோன்- சத்தமாய்
யாரோ ஒருவரின் அலை பேசியில் இருந்து…

ஆசயன்
20-07-06

பார்த்ததில் பிடித்தது....